பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அழகிரி நேரில் ஆறுதல்

243 0

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார்.சென்னை பள்ளிக்கரணை அருகே ரோட்டில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ (22) என்ற பெண் என்ஜினீயர் பலியானது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். ஐகோர்ட்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.

தமிழ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார். அருகில் வசந்தகுமார் எம்.பி., மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், நகர தலைவர் தீனதயாளன்.

அவருடன் எச்.வசந்தகுமார் எம்.பி., காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

கட்சி தலைவர்களை பார்த்ததும் கண்கலங்கிய சுபஸ்ரீயின் பெற்றோர் தனது மகளின் சாவுக்கு பிறகாவது பேனர் கலாச்சாரம் ஒழியட்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் தனது மகளின் சாவுக்கு காரணமான அரசியல் கட்சி பிரமுகரை இதுவரை கைது செய்யாததை வேதனையுடன் குறிப்பிட்டனர்.

பின்னர் வெளியே வந்த அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூறிவிட முடியாது. மனித தவறுகளால் நிகழ்ந்த இந்த துயரம் மறக்கமுடியாதது. மன்னிக்க முடியாதது.

சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆன பிறகும் பேனர் வைத்தவரை போலீசார் அழைத்து கூட விசாரிக்காதது வருத்தமாக உள்ளது. குற்றவாளி அடையாளம் தெரிந்தும் கைது செய்யாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

சாலைகளில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் போட்டு பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.