மதுரை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மதுரையில் இன்று போதை தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பாண்டிகோவில் பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் தெரிவித்தனர். இதையடுத்து காரை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, காருக்குள் பண்டல் பண்டலாக 140 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் கைப்பற்றியதுடன், காரில் வந்த இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.