புனரமைக்கப்பட்ட வீதி எங்கே?

195 0

ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தையடுத்து ரணிலைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்தொகை பணத்தை கம்பரலிய திட்டம் எனும் பெயரில் ரணில் அரசு வழங்கிவருகின்றது

ஒவ்வொரு திட்டத்திற்குமான காசும் அதற்குப் பிறிதாக திட்டங்களைச் சென்று பார்வையிடுதல் உள்ளிட்ட செலவுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளிற்கு மாதந்தொறும் தலா மூன்று இலட்சம் ரூபா இடப்பட்டுவருகிறது.

இந்நிலையில் குறித்த கம்பரெலியத் திட்டத்தில் மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்த நிலையில் உடுவில் பகுதியில் வீதி ஒன்று புனரமைக்கப்பட்டதாகக் கூறி பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளபோதும் குறித்த வீதி கல்லும் குழியுமாகவே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர்.

குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர்.

கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபதி, பிரதமரின் படத்துடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் படமும் பொறிக்கப்பட்டே பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுவருகின்றன.

குறித்த பிரதேசத்திற்குரிய கம்பரலிய வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.