சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதன்பிரகாரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினது இணக்கம் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் குழு அறை 2 இல் மத்திய வங்கி பிணைமுறி குறித்தான கோப் குழு கூடியது. இதன்போது இவ்விவகாரம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதி குழு அறையில் கூடிய கோப்குழு கூட்டத்தின் போது மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக பெரும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது. இதனையடுத்து கோப்குழு கூட்டத்தில் இருந்து அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வெளிநடப்பு செய்திருந்தார். குறித்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அழுத்தம் பிரயோ கிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் நேற்று முன்தினம் கூட பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலை யில் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக கோப் குழு நேற்று மீண்டும் கூடியது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் இணக் கம் தெரிவித்தமைக்கு அமைவாக கோப் குழுவின் அறிக்கை நாளை பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.