பிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு

258 0
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபாவை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு இன்று (17) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வேறொரு வழக்கில் வாதாடுவதால் இந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு தனது கனிஷ்ட சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட போது மீதொட்டுமுல்ல பகுதியில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபாவை கேட்டு அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.