முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பிரபல லண்டன் டொக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே சிகிச்சை அளித்தார்.
இதே போல் டெல்லி எய்ம்ஸ் டொக்டர்கள் குழுவினரும் அப்பலோ வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இது மட்டுமின்றி சிங்கப்பூரில் இருந்து 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்களும் வந்து சிகிச்சை மேற்கொண்டனர்.
இதனால் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
லண்டன் டொக்டர் ஜான் ரிச்சர்ட் பீலே 3 முறை அப்பலோ வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.
இதில் ஓரளவு பலன் கிடைத்ததால் நேற்று முன்தினமிரவு அவர் லண்டன் சென்றுவிட்டார்.
டெல்லி எய்ம்ஸ் டொக்டர்களில் இதய சிகிச்சை நிபுணர் நிதிஸ்ராயக், மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சனடிரிக்கா ஆகிய 2 பேர் சில நாட்களில் அப்பலோ வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் பற்றி கண்டறிய உள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர் சிகிச்சை பெறும் வார்ட்டில் பார்வையாளர்கள் யாரும் இதுவரை அனுமதிக் கப்படவில்லை.
நேற்றுடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 35 நாட்களாகிறது.
ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் அப்பலோ வந்து செல்கிறார்கள்.
ஆஸ்பத்திரி வாசலில் தினமும் மகளிர் அணியினர் பூஜை நடத்துகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அ.தி.மு.க வினர் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.