அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு இவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதால், அவரது மருத்துவ மனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3-ந்தேதி உல்ரிச் கிளோபர் உயிர் இழந்தார். அதனை தொடர்ந்து, டாக்டரின் குடும்பத்தார் அவரது சொத்துகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம், அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.