யாழ்ப்பாண மாணவர்கள் படுகொலை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன் கைது

376 0

images-1யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஸன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு பல்வேறு அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் தனித்தனியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொது செயலாளர் சத்ரியன் வேணுகோபால், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த திருமாவளவன், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட வேண்டும். பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக செய்துவரும் துரோகங்களை இந்திய மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்க்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில். சீமான், தடா சந்திரசேகரன், ராவணன், அன்பு தென்னரசன், சிவகுமார், பாக்யராஜன், செந்தில் குமார், ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சீமான், இலங்கையில் சம்பள உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.