மோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி

257 0

உத்தரகாண்டில் விவசாயியின் மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிகப்படியான அபராதங்களை அரசு விதிப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் டிராபிக் விதிகளை மீறியதாக ஒடிசாவைச் சேர்ந்த நபருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சமீபத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக்கின் உரிமையாளர் ஒருவர் அதிக பளுவை ஏற்றி, புதிய வாகன விதிகளை கடைபிடிக்காததால் ரூ.1,41,000 அபராதம் கட்டினார்.
மோட்டார் வாகன சட்டம்

இதையடுத்து உத்தரகாண்டில் சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பங்கஜ் குமார் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மாட்டுவண்டியை பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டனர்.

அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில் அது ரியாஸ் என்பவருடையது என கண்டறியப்பட்டது. இதையடுத்து வண்டியினை அவரது வீட்டுக்கு கொண்டுச் சென்று ரியாசிடம் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ரசீதை கொடுத்துவிட்டனர்.

இதனால் ரியாஸ் அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து அவர் கூறுகையில், ‘வண்டியை என் வயலுக்கு வெளியில்தான் நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது என தெரியவில்லை.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டுவண்டி வராதபோது அதற்கு ஏன் அபராதம்? என குழம்பினேன். பின்னர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விசாரித்தேன்.
அப்போது அவர்கள் மணல் கடத்தும் மாட்டு வண்டிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் நினைத்ததாகவும், பில் புக் மாறியதாலும் தவறு நடந்துவிட்டதாகக் கூறி ரசீதை கேன்சல் செய்தனர்’ என கூறியுள்ளார்.