கொழும்பு தாமரை கோபுரம் இன்று திறப்பு

330 0
தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரம் தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக கருதப்படுவதுடன், இதன் உயரம் 356 மீற்றர்களாகும்.

104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீட்டில் இதன் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ள அதேவேளை, அதில் 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன அரச வங்கியான எக்சீம் வங்கியினால் வௌிநாட்டு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள செலவுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது.

பேர வாவிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் கீழ் பகுதியில் மூன்று மாடிகள் பொது மக்கள் பாவனைக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுழலும் உணவகம் ஒன்றும் இதில் அடங்குகின்றது.

இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான வானிலையில் கட்டுநாயக்க விமான நிலையம், சிவனொளிபாத மலை ஆகியவற்றை பார்க்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.