யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காது அமைச்சர் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் தொடர்பிலும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது நீதியான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம், ஆவா வாள்வெட்டுக் கும்பலை இராணுவப் புலனாய்வாளர்களே வழிநடத்துவதாக யாழ் குடாநாட்டு மக்கள் குற்றம்சாட்டுகின்றார்களே அது தெரியுமா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு எந்த பதிலையும் கூறாது அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து எழும்பி அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்.