எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து அதனை நடத்துவதற்கான பூரண செயற்பாட்டு அதிகாரம் சர்வதேச ஜனநாயக தினமான இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 1981ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க திருத்தப்பட்ட தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரமே ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரங்கள் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.
இந்த அதிகாரங்களின் பிரகாரம் வேட்பு மனுக்களுக்கான கோரிக்கை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி, கட்டுப்பணங்களை பெற்றுக் கொள்ளுவதற்கான அறிவிப்புக்களை முன்னெடுக்க முடியும்.
அத்துடன் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட காலத்திலிருந்து, தேர்தல் பிரசாரங்களில் அரச சொத்துக்கள் பயன்படுத்தல், அரச நிறுவனங்களை பயன்படுத்தல், வேட்பாளர்களின் பரப்புரைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளை கண்காணித்தல், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் ஆகிய விடயங்களிலும் தீர்மானங்களை எடுத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள அரசியல் கட்சிகள், கூட்டணிகளின் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபடவுள்ளது.
ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர ஆகியோரின் தலைமையில் இந்தச் ச ந்திப்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலுக்கான சட்டங்கள், தேர்தல் ஒழுக்க நெறிகள் சம்பந்தமாக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்கள் நடைபெறவுள்ளன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டான பரிந்துரைக்கமைவாக தேர்தல் ஒழுக்கநெறிகள் தொடர்பான வழிகாட்டியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது வழமையாக இருந்து வருகின்ற போதும் இம் முறை ஆணைக்குழுவானது ஒழுக்கநெறியிலுள்ள விடயங்களில் எவ்விதமான மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு இடமளிக்காது இறுக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிகிறது.
இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள், உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் அனைவருக்கும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அமைப்புக்களுக்கும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இதுவரையில் 14அரசியல் கட்சிகள் அறிவிப்பினை விடுத்துள்ளன. அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக 17வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளர் நிஹால் புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 2018ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படுமெனவும் அதனால் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 2 இலட்சம் பேர் மேலதிகமாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அன்றையதினம் முதல் 63 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமென்றும் கூறியுள்ளார்.