சிறைச்சாலைக்குள் கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரதம்

262 0

தடுப்பு காவலிலுள்ள பாதாள உலக குழுவின் முக்கியஸ்தர் கஞ்சிப்பானை இம்ரான், சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பூஸா சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிப்பானை இம்ரானுக்கு தொலைப்பேசிகளை கொண்டுசென்றமை தொடர்பாக  கைது செய்யப்பட்ட தந்தையார் மற்றும் சகோதரன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை  அவர் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி மாளிகாவத்தையில் 05 கிலோ 300 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்தமை மற்றும்  வர்த்தகத்தில்  ஈடுபட்டமை தொடர்பாக கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

இதற்கமைய, தனது கட்சிக்காரர் அக்குற்றங்களை ஏற்றுக்கொள்வதாக அவரது சார்பில்  முன்னிலையான சட்டத்தரணி லக்‌ஷ்மன் பெரேரா தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 3 வருடங்கள் வீதம் 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் அண்மையில் இம்ரானுக்கு தொலைப்பேசிகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் அவரது தந்தை மற்றும் சகோதரன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.