சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புனிதம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.
வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமணம் நேற்று முன்தினம் ஆன்மிக விதிகளை மீறியும், பல்லாயிரமாண்டு நடைமுறைகளை மீறியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும். நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது. இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.
சிதம்பரம் நடராசர் கோயிலை யார் நிர்வகிப்பது என்பது குறித்து தமிழக அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் பல கட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் தமிழக அரசு தான் கோவிலை நிர்வகிக்க வேண்டும்; நடராசர் கோயில் தீட்சிதர்களின் சொத்து அல்ல என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, தீட்சிதர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடலாம் என்று அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
அந்த வகையில் இப்போதும் தில்லை நடராசர் கோயிலில் நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. தேவைப்பட்டால் நடராசர் கோயிலின் நிர்வாகத்தையும் தமிழக ஆட்சியாளர்களால் கையகப்படுத்த முடியும்.
எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.