நல்லிணக்கத்திற்கான பயணத்தின் போது வடக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அசம்பாவிதமாக ஒரு சம்பவம் நேர்ந்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலையீடுகளினால் பாரிய பிரச்சினையொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கில் அண்மை காலமாக மோட்டார் சைக்கிள்களில் சுற்றித் திரியும் கலாசாரமொன்று உருவாகியுள்ளதாகவும், இதனால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையினால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவமாகவே தாம் இதனை அவதானிப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், அனுபவமில்லாத சில பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்கு மாறுப்பட்ட கருத்துக்களை வழங்கி வருகின்றமையினால், அபாயகரமான சூழ்நிலையொன்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.