சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகார பாதையை தேர்ந்தெடுப்பார்கள்.
சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை. சர்வாதிகாரத்தால் எதனையும் சாதிக்கலாம் என்று ஒருசிலர் நம்புகிறார்கள்.
அதற்கு மாறாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி பல்வேறு பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனை இதனைவிட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
வெள்ளை வான் கலாசாரதினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது. சகலருடனும் ஒற்றுமையாக செயற்படுவதினூடாகவே இலக்குகளை அடைந்துக்கொள்ள முடியும்.
கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டது போன்று மறுபுறம் ஜனநாயகத்தையும் படிபடியாக கட்டியெழுப்பியுள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இந்த அரசாங்கத்துக்கு அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்தது.
சுமைகளின் மத்தியில் ஆட்சியை பொறுப்பேற்று கொண்டிருந்தாலும் சவால்களை பொருட்படுத்தாமல் சிறந்த வெற்றி இலக்குகளை அடைந்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.