அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை: டிரம்ப் விரைவில் முடிவு

343 0

ஜனாதிபதி டிரம்ப், அனைத்து வகையான இ-சிகரெட்டுகளையும் தடை செய்ய விரும்புவதாகவும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. அங்கு இ-சிகரெட்டால் ஏற்கனவே 5 பேர் உயிர் இழந்த நிலையில், கான்சாஸ் மாகாணத்தில் இ-சிகரெட் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயதான நபர் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும், நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இ-சிகரெட்டு

இந்த நிலையில் இ-சிகரெட் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டிரம்பின் மனைவி மெலனியாவும் உடன் இருந்தார்.

அப்போது பேசிய டிரம்ப், “நம் நாட்டில் நமக்கு புதிய பிரச்சினை உருவாகி உள்ளது. இ-சிகரெட் எனப்படும் அந்த பிரச்சினையால் அப்பாவி சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் நோய்வாய்ப்பட நாங்கள் அனுமதிக்க முடியாது. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வுகாண வேண்டும்” என கூறினார். ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், “ஜனாதிபதி டிரம்ப், அனைத்து வகையான இ-சிகரெட்டுகளையும் தடை செய்ய விரும்புகிறார். இது குறித்து தனது நிர்வாகம் விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என உறுதி அளித்து இருக்கிறார்” என கூறினார்.