பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்

286 0

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதும், அதனால் கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பதும் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிப்பதாகவும், அந்நாட்டில் திடக்கழிவு குறித்த சட்டங்கள் மோசமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்லாது பிளாஸ்டிக்கை முறையாக மறுசுழற்சி செய்யும் பணியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கவும் அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிலிப்பைன்சில் ஒரு கிலோ அரிசி இந்திய மதிப்பில் ரூ.50-க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.