சட்டவிரோத பேனர் விவகாரம்- அதிகாரிகளை கேள்விக் கணைகளால் திணறடித்த நீதிபதிகள்

302 0

சட்டவிரோத பேனர் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி திணறடித்தனர்.சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், காவல்துறை தரப்பில் பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர் ஆல்பி வர்கீசும் ஆஜரானார். அவர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

“சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், பேனர் வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்ப்டடது?

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை. ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுப்பதை சிலர் நம்புகிறார்கள். உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? விதிகளை மீறி பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சகிள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், பேனர்கள் வைக்கக்கூடாது என ஏற்கனவே அரசியல் கட்சிகள் அறிவுறுத்தி உள்ளன என கூறினார்.