மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் – தமிழகத்தில் விரைவில் அமல்

261 0

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அபராதத்தை குறைத்து விரைவில் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வாகன விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக ஏற்கனவே உள்ள வாகன போக்குவரத்து  சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த புதிய சட்டத்தின்படி அபராத தொகை மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில்  கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
செல்போனில் பேசியபடி வாகனங்களில்  சென்றால் ரூ.2500 அபராதம், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ-.5 ஆயிரம், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம், சீட் பெல்ட்  அணியாவிட்டால் ரூ-.1000, ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000, மதுகுடித்து விட்டு வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என அபராத தொகை மிக அதிகமாக உள்ளது. இவ்வாறு ஒரு வாகன ஓட்டி ஒரே நேரத்தில் பல விதிமீறல்களை செய்யும் போது விதிக்கப்படும் அபராத தொகை மிக அதிகமாக இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ-.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.   அரியானா மாநிலம் குர்கானில் ரூ-.16 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அளவுக்கு மீறிய அபராத தொகை வசூலித்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும், சமூக பிரதிநிதிகளும் சட்டத்தை விமர்சித்தனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலமான குஜராத்தில் வாகன அபராத தொகையை அந்த மாநில அரசே தன்னிச்சையாக குறைத்தது. இதேபோல  அந்தந்த மாநிலங்கள் தேவைப்பட்டால் அபராத தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்கு வரத்து மந்திரி நிதின்கட்காரி கூறினார்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இப்போது அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் அபராத தொகை குறைப்பதற்கு அரசு பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் அபராத தொகையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் இந்த சட்டத்தை அமல்படுத்து வதை நிறுத்தி வைத்துள்ளனர். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி  அபராத தொகை அதிகமாக இருப்பதால் இந்த சட்டத்தையே தனது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
தமிழக அரசு
சில மாநிலங்களில் இன்னும் பழைய நடை முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசு அதற்கான அறிவிக்கைகளை வெளியிட வேண்டும். ஆனால் அவ்வாறு வெளியிடாமல் உள்ளனர். இவ்வளவு அதிக அபராத தொகை வசூலிக்கப்பட்டால்  மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலை ஏற்படும் என்று கருதுவதால் ஒவ்வொரு மாநில அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் இந்த சட்டம் அமல்படுத்தப் படவில்லை. அபராதத்தை குறைத்து அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
மத்திய மந்திரி நிதின் கட்காரி அபராத தொகையை அந்த மாநில அரசே குறைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தாலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தில் மாநில அரசு தன்னிச்சையாக குறைத்துக் கொள்ள அதிகாரம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் அனைத்து அபராத தொகையையும் பாதியாக குறைத்துள்ளனர். இது சட்ட விதிமீறல் என்று கூறப்படுகிறது. எனவே மாநில அரசு தன்னிச்சையாக குறைக்க முடியுமா? என்பது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை சட்டத்துறையிடம் கருத்து கேட்டுள்ளது.
அது சம்பந்தமாக உரிய உத்தரவு வந்ததற்கு பிறகு தான் மாநில அரசுகள் அபராத தொகையை குறைக்க முடியும் என்று மத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் சட்டம் 254-வது பிரிவின்படி மத்திய அரசு கொண்டுவரும் ஒரு சட்டத்தில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து வரவில்லை என்றால் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மாநிலங்கள் மீறுவது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. குஜராத் இந்த விஷயத்தில் சட்ட விதிகளை மீறி இருக்கிறது என்று உயிர்பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பியூஸ்திவாரி கூறியிருக்கிறார்.