ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த

230 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணியை தோல்வியடைச் செய்வதில் இவர்களே மும்முரமாக இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது பொறுத்தமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி சின்னம் குறித்து முரண்பாடுகளும் தோன்றியுள்ளன. இது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் விசுவாசிகளாவர். இதனால் தான் பொதுஜன பெரமுனவையும் , மஹிந்த ராஜபக்ஷவையும் வேண்டாமென ஒதுக்கிவிட்டு தனித்து செல்வது போல் காண்பித்து மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க முனைகின்றனர்.

அது மாத்திரமின்றி மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தயாசிறி ஜயசேகரவும் மறைமுகமாக தொடர்புபட்டுள்ளார். கோதாபய ஆட்சியமைத்தால் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். எனவே தான் இதிலிருந்து தப்பிப்பதற்காக தயாசிறி இவ்வாறு செயற்படுகிறார என்றும் குற்றம் சாட்டினார்.