விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.