16 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – சீனா சலுகை

296 0

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது.இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது 17-ந்தேதி அமலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.