எழுக தமிழ்’ பேரணியை முன்னிட்டு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

424 0

தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும்  16ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்.மண்ணில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு கோரி தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்களிப்பையும் உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றை மூடியும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் மீனவர்கள் தமது தொழிலுக்குச் செல்லாதும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை, அத்தியாவசிய அவசர தேவை நிமித்தம் பயணிப்பவர்களதும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று திரும்புபவர்களினதும் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலான மருந்தகங்கள், வண்டி வாகன திருத்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவை வழமைபோன்று இயங்குவது அவசியமென்றும் அந்த பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்றும் தமிழ் மக்கள் பேரவை  அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.