கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்… கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்…’ என்று ஒரு படத்தில் பாடல் வரிகள் வரும். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை திருமணம் செய்துள்ளார்.
2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா முதன்முறையாக தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு பார்க்கிங்கில் சந்தித்தார். அப்போது மைக்கேலுக்கு 17 வயது. நினாவுக்கு 16 வயது.
சில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி விட்டார். கொள்ளைக் கூட்டத்தில் 17 வயது சிறுவன் என்ற அடைமொழியோடு அமெரிக்க பத்திரிகைகளில் புகைப்படத்துடன் மைக்கேல் தொடர்பான செய்திகள் வெளியாகின. வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
காதலன் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றால் 16 வயது இளம்பெண் என்ன செய்வாள்? மைக்கேலை காதலித்த நினா அவர் சிறை செல்வதற்கு முன்பே தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன் என உறுதி அளித்துவிட்டார். முதல் 6 ஆண்டுகள் இவர்களுக்கு இடையேயான காதல் கடிதம் மூலம் மட்டுமே வளர்ந்துள்ளது.
மைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது. 2012 -ம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்தனர். அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். அவரது தாய் மற்றும் நெருங்கிய தோழி இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.
மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன்பின்னரும் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.
கணவரின் வருகை குறித்து பேசியுள்ள நினா ஹோப்லெர், “மைக்கேல் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார். விடுதலை பெற்று சுதந்திர மனிதனாக அவர் எடுத்து வைக்கும் முதல் அடியை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். மைக்கேல் சிரித்தபடி எனது வீட்டு வாசலைத் திறக்கும் காட்சிகள் மனதில் நிழலாடுகிறது. அந்த விலைமதிப்பற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் எப்போது வெளியில் வருவார் எனத் தெரியவில்லை. நான் அவருக்காகப் போராடுவேன் எனக் கூறும் நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது.