ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு வெளியாக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாதுள்ளமை மற்றும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை போன்ற விடயங்கள் குறித்து, மனித உரிமைகள் ஆணையாளர் தமது வாய்மொழி அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், யுத்தக்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு சட்டத்துறையினரின் பங்கேற்பு கட்டாயமானது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அடுத்த வருடம் இலங்கையில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை மீதான போர்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொறுப்புக்;கூறலின் போது சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய ரஸ்ய பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமது உள்நாட்டு பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் அமரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கானா மற்றும் மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை இன்னும் தமது அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக, யுத்தக்குற்ற விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு கட்டாயமானது என்று, ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் உறுதியளித்த பல விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாதுள்ளன.
இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக மறுசீரமைப்பு, நீதி வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி வலியுறுத்தினார்.