துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.22 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

310 0

201610261111183322_woman-flyer-from-dubai-held-wearing-gold-worth-rs-22-lakh_secvpfதிருச்சி விமான நிலையத்தில் ரூ.22லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நேற்றிரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கி சென்றதும், துப்புரவு பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள் இருக்கையின் அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதனைப் பார்த்த துப்புரவு பணியா ளர்கள் இதுபற்றி, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்சலை மீட்டு சோதனையிட்ட போது, அதில் 695 கிராம் தங்கம் இருந்தது . அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் இருக்கும். அந்த தங்கத்தை துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த பயணி யாரென்று தெரியவில்லை. துபாயில் இருந்து கடத்தி வந்த அவர், திருச்சி வந்ததும், அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, இருக்கையின் அடியில் பார்சலை போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இது தொடர்பாக அந்த விமானத்தில் வந்த பயணிகளின் விவரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.