இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆங்கில நாவல்களில் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 48 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் 155 நாவல்களை வாசித்து, அவற்றில் 13 நாவல்களை இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர்.
பின்னர் நடைபெற்ற பல மணிநேர பரிசீலனைக்கு பிறகு அமெரிக்காவை சேர்ந்த பிரபல நையாண்டி எழுத்தாளரான பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற சமூக நையாண்டி நாவல் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் வழக்கொழிந்துப்போன அடிமைமுறையையும், பள்ளிகளில் நிறபேதத்தால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவதையும் மீண்டும் நடைமுறைப்படுத்தி, அமெரிக்க வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தை ஆப்பிரிக்க-அமெரிக்காரான ‘பான்பான்’ என்பவர் தனது அயராத முயற்சியால் மீண்டும் அமெரிக்க வரைபடத்தில் சேர்ப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள ‘தி செல்அவுட்’ நாவல் முழுவதும் நையாண்டி நெடியுடன் தற்கால அமெரிக்காவில் நிலவிவரும் நிறபேத பாகுபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
289 பக்கங்களை கொண்ட இந்த நாவலுக்கு நேற்று லண்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கார்ன்வால் இளவரசி கமிலா பார்க்கர் மான்புக்கர் பரிசுடன் 50 ஆயிரம் பவுண்டுகளை ரொக்கமாக வழங்கினார்.
54 வயதாகும் பால் பீட்டி இந்தப் பரிசை பெறும் முதல் அமெரிக்க எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.