மியான்மர் சென்று திரும்பிய முதலை புயல்: ஆந்திரா நோக்கி நகர்கிறது

367 0

201610261231271462_myanmar-return-crocodile-storm-andhra-pradesh-towards_secvpfமியான்மர் சென்ற முதலை புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மியான்மர் (பர்மா) கடற்கரை நோக்கி நகர்ந்தது. இங்கு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என்று ‘யுடர்ன்’ அடித்து புயல் இந்தியாவின் கிழக்கு வங்க கடல் நோக்கி திரும்பியது.

இந்த புயலுக்கு மியான்மர் நாட்டு மொழியில் ‘கியான்ட்’ (முதலை) என பெயரிடப்பட்டது. நேற்று முதலை புயல் ஒடிசா- ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒடிசாவின் கோபால்பூர் நகரில் இருந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 710 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்தப்புயல் தீபாவளி தினமான வருகிற 29-ந்தேதி சென்னையில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள ஆந்திராவின் ஓங்கோலில் கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் இந்தியா பசிபிக் பெருங்கடலுக்கான ஒருங்கிணைந்த புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் முதலை புயல் நாளை ஆந்திரா கடல் பகுதிக்குள் நுழையும். நாளை மறுநாள் (28-ந்தேதி) விசாகப்பட்டினம் வழியே கரையை கடக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆந்திரா, ஒடிசா கடற் பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் சென்னை, புதுச்சேரி உள்பட கிழக்கு கடற்கரை பகுதிகளில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலையொட்டி சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் கடலூர், நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.