நாமலை காப்பாற்ற அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கும் மஹிந்த

343 0

mahinda1மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநரினால் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தற்போது கூட்டு எதிர்க்கட்சியினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

எனினும் இது தொடர்பில் ஊடகங்களில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வங்கி சம்பவத்தின் கோப் அறிக்கை தொடர்பிலும், சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமை இரத்து செய்யப்பட்டமை தொடர்பிலும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறும் என பிரசன்ன ரணதுங்கவினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் தான் கூறும் வரையிலும், தான் நாடாளுமன்றத்திற்கு வரும் வரையிலும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பின்னர் நேற்று 2 மணியவில் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், “கோப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கும் இடமளிக்குமாறும், இது தொடர்பில் எவ்வித பகிரங்க கருத்துக்களையும் வெளியிட வேண்டாம்”… எனவும் மஹிந்த அறிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான, Perpetual Treasuries நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் எலொசியஸ் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் கருத்து வெளியிடுவதனை மஹிந்த நிராகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.

மத்திய வங்கி பிணை முறி கொள்வனவின் போது மோசடியான முறையில் பாரிய இலாபத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் அர்ஜுன் எலொசியஸ் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.