ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் செலவு செய்த தம்பதி

244 0

அமெரிக்க நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவு செய்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி நகரை சேர்ந்த தம்பதி ராபர்ட் வில்லியம்ஸ்-டிப்பனி வில்லியம்ஸ். அண்மையில் டிப்பனி வில்லியம்சின் வங்கி கணக்கில் தவறுதலாக 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சத்து 92 ஆயிரம்) டெபாசிட் செய்யப்பட்டது.

இப்படி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியிடம் ஒப்படைக்க வேண்டியது சட்டமாகும். ஆனால் ராபர்ட் வில்லியம்ஸ்-டிப்பனி வில்லியம்ஸ் அதை செய்யாமல் தங்களுக்கு கிடைத்த பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக செலவு செய்தனர்.

3 சொகுசு கார்கள் உள்பட ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்த அந்த தம்பதி, தங்கள் நண்பர்களுக்காகவும் செலவு செய்தனர். இப்படி 2 வாரங்களுக்குள், மொத்த பணத்தையும் செலவு செய்துவிட்டனர்.

இதற்கிடையில், நீண்ட விசாரணைக்குப் பிறகு டிப்பனி வில்லியம்சின் வங்கி கணக்கில் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதை கண்டுபிடித்த வங்கி நிர்வாகம் அவரை தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தியது.

ஓரிரு நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய தம்பதி பின்னர் வங்கி உடனான தகவல் தொடர்பை துண்டித்து கொண்டனர். இதையடுத்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராபர்ட் வில்லியம்ஸ்-டிப்பனி வில்லியம்ஸ் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.