கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறீலங்காக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், உந்துருளியில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் கடந்த 21ஆம் திகதி குளப்பிட்டிச் சந்தியருகில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரு இளைஞர்களும் விபத்தில் மரணமானதாகவே காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் நடைபெற்று மறுநாள், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் மரணமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உந்துருளியை ஓட்டிச்சென்ற மாணவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார், மற்றைய மாணவர் உந்துருளி கட்டுப்பாட்டையிழந்து மதிலில் போதியதால் விபத்தில் மரணமானார்.
இச்சம்பவம் தெரியவந்தபின்னர், சோதனைச் சாவடியில் தமது உத்தரவையும் மீறிச் சென்றதாலேயே சுட்டதாக காவல்துறையினர் தமது நிலைப்பாட்டை மாற்றித் தெரிவித்தனர்.
சிறிலங்கா காவல்துறையினர் சட்டத்துக்கு முரணான வகையில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டமை கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
காவல்துறையினரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தால், பின்னால் இருந்தவருக்குப் படாமல் எப்படி உந்துருளியை ஓட்டிச் சென்றவரை குண்டு துளைத்திருக்கும் என்பது தொடர்பாகவும் விசாரணை நடாத்தப்படவேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அதிபரிடம் முறையிடப்பட்டதையடுத்து, ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த முதற்கட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கடந்தகாலத்தில் நிகழ்ந்த உயர்மட்டத் தொடர்புகளைக் கொண்ட பல மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளது.
இந்தச் சூழலில், மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் பக்கசார்பற்றதாக இடம்பெறுமா என்ற சந்தேகங்கள் உள்ளன.
எனவே, சுதந்திரமான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை சிறிலங்கா பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் இதுபோன்ற சட்டத்துக்கு முரணான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், மாணவர்கள் கொலை தொடர்பாக பக்கசார்பற்ற- வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.