அமெரிக்காவை தொடர்ந்து கனடாவை புரட்டிப்போட்ட ‘டோரியன்’ புயல் – 5 லட்சம் பேர் பாதிப்பு

299 0

அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை தாக்கிய டோரியன் புயல் தற்போது கனடாவை தாக்கியதில் 5 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘டோரியன் புயல்’ கடற்கரையோரம் உள்ள நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

கடந்த 1-ந்தேதி மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் பஹாமஸ் தீவை தாக்கிய டோரியன், அந்த தீவை புரட்டிப்போட்டது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பஹாமஸ் தீவில் 43 பேர் இந்த புயலுக்கு பலியான நிலையில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

70 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். புயல் காரணமாக அபகோஸ் தீவில் குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் தீவை விட்டு வெளியேறி தலைநகர் நஸ்யாவுக்கு செல்கின்றனர்.

பஹாமசை அடுத்து அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை ‘டோரியன்’ புயல் தாக்கியது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.

தொடர்ந்து கனடாவின் நோவா ஸ்கோபியாவைத் தாக்கிய டோரியன் நேற்றிரவு கனடாவை கரையை கடத்ததாக அறிவிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஹாலிபேக்ஸ் நகரில் 5 லட்சம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. எனினும் போதிய முன்னேற்பாடுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுசீரமைப்பு பணிகளை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி உள்ளது.