2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கின் போது முன்னிலையாகாத பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இதன் போது கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த சந்தேகநபரை சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவரும் மேலதிக 7 பொலிஸாரும் இணைந்து சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்து கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசியதாக மல்லாகம் நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து அறிக்கை ஒன்றினை சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்திருந்தனர்.
இதன் காரணமாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் கொலை வழக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 8 பேருக்கு எதிராக சித்திரவதை வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.