எமது நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியுமே ஒரு சீரான கொள்கையின் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கின்ற கட்சிகளாகும். அவ்வாறு கொள்கையொன்றை மையப்படுத்தி இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றுவது மிகவும் இலகுவானது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததைத் தவிர அமைச்சு பதவிகளையோ, வரப்பிரசாதங்களையோ பெற்றுக்கொள்ளாத கூட்டமைப்பை புதிய அரசியலமைப்பை தருவதாகக்கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டது. இம்முறையும் ஐ.தே.க. விற்கு ஆதரவளிப்பதில் எவ்வித பயனுமில்லை. ஆகவே மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த பயணத்தைக் கூட்டமைப்பினர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ‘கடந்த ஆண்டு அக்டோபர் மாத அரசியல் நாடகத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும், இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள். அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் காணலாம் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் நோக்குகையில், அதுவே செல்வதற்கான பாதை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சுமந்திரனுடைய இந்தக் கருத்து தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுமந்திரனுடைய நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. அவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை எவ்வித கொள்கையுமற்ற விதத்திலேயே தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. ஊழல் என்பது ஒருபுறமிருக்க, கொள்கை இல்லை என்பது முக்கியமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு நேர்த்தியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. அவ்வாறு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது உண்மையில் இலகுவானதொன்றாகும். கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போதிலும் அமைச்சுப் பதவிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ளவில்லை.
அதன் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு சுமார் 3 வருடங்களின் பின்னரேயே அவருக்கு ஒழுங்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வழங்கப்பட்டது. கூட்டமைப்பினர் பெரிதாக எந்த வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பை தருவதாகக்கூறி கடந்த 4 வருடங்களாக அவர்களை ஏமாற்றியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதில் எவ்வித பயனுமில்லை. எனவே மக்கள் விடுதலை முன்னணியும், கூட்டமைப்பும் இணைந்த பயணம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் காணப்படுகின்றன.
இரா.சம்பந்தன், சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் கட்சிகளுடன் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். வெகு விரைவிலேயே கூட்டமைப்பினருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.
இதேவேளை, ஏன் ஜே.விபியால் வாக்குகளை பெறமுடியவில்லை என்று வினவிய போது பிமல் ரத்நாயக்க பின்வருமாறு பதிலளித்தார்.
இதனை ஒரு இலகுவான உதாரணம் மூலம் விளக்கலாம். கீரைக்கஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும்கூட அதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதேவேளை மதுபானம் உடலுக்குக் கேடு என்றாலும் மதுபான சாலைகளில் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும். அதேபோன்று தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.ஊழலற்ற சீரான கொள்கையுடன் கூடிய அரசியல் கலாசாரத்தையே நாங்கள் பின்பற்றி வருகின்றோம். ஆனால் சில பிரபல நிறுவனங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், மதத்தலைவர்கள் எம்மை விரும்புவதில்லை. அவர்களுடைய ஊழலை மையப்படுத்திய கொள்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்றவை ஆட்சிக்கு வருவதே உகந்ததாக இருக்கின்றது. எனினும் தற்போது புத்திஜீவிகள், தொழில்புரிவோர் உள்ளிட்டோர் அக்கட்சிகளில் இணைந்துகொள்வதில்லை. அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிலேயே இணைகின்றனர். இதுனையே நாம் பாரிய மாற்றமாக நோக்குகின்றோம்.