இதே நாள் அன்று பாடசாலைக்கு பரீட்சை எழுத வெள்ளை ஆடையுடன் சென்ற ஈழத்து குழந்தை கொடிய சிங்கைபடைகளின் கோரப்பற்கள் கொண்டு வேட்டையாடப்பட்டு, துகிலுரியப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டநாள். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் உறவுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்களுக்கான நீதி கிடைக்கட்டும்.
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி 1996 செப்ரெம்பர் 7ஆம் திகதிகாலை 7.15 மணிக்கு தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் அந்த மாணவி அந்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றாள். சில மணி நேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.
மகள் பாடசாலை சென்ற பின்னர் தாய் ராசம்மா கோவிலிற்கு சென்றார். சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும். சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார்.
தனது மகளின் பரீட்சை 9.30இக்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார்.
வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். அந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து, கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும் நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக் கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காவலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
ஆனால் அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை. இந்த படுகொலையே இன்று ஏழாம் திகதி இரு தசாப்தங்களின் பின்னர் நினைவு கூரப்படவுள்ளது. இந்த படுகொலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.