தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளை உள்ளடக்கிய பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் முக்கிய சந்திப்பு இன்று நண்பகல் 12.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரையில் தன்னார்வமாக ஈடுபட்டுவந்த சமூக செயற்பாட்டாளர்களது ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ்-2019 ஏற்பாட்டுக் குழுவினர் பங்கேற்று விளக்க கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
தேவன்பிட்டி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்த இச்சந்திப்பில் பேசாலை, ஓலைத்தொடுவாய், வலைப்பாடு, தேவன்பிட்டி, கத்தாளம்பட்டி, நாவாந்துறை, மூன்றாம்பிட்டி, கள்ளியடி, படகுத்துறை, இலுப்பைக்கடவை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் செயற்பட்டுவரும் சமூகமட்ட அமைப்புகளின் சார்பில் வருகைதந்திருந்த ஐம்பதிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த பகுதிகளில் இருந்து எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு மக்களை அணிதிரட்டி வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதனை நடைமுறப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
08/09/2019