புதிய ஜனாதிபதி யார் என்ற அங்கலாய்ப்பு இன்று எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. அனுரகுமார திசாநாயக்க வருவாரா? கோட்டாபய ராஜபக்ஷ வருவாரா? அல்லது ரணில் விக்கிரமசிங்க வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் உள்ளது.
எங்களை பொறுத்த வரையில் நாங்கள் ரணில் விக்கிரசிங்க அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருக்கிறோம். ஏனைய கட்சிகள் இரண்டும் வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டன. ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை தெரிவு செய்யாதற்கு என்ன காரணம் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும்.
ஒரு பக்கம் நான் வேட்பாளர் என்று சொல்லி சஜித் பிரேமாதாச கூட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றார். இன்னொரு பக்கம் நான் ஜனாதிபதியாக கேட்கப்போகிறேன் என்று ரணில் விக்கிரசிங்க சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆகவே, இருவரில் ஒருவர் தான் வர முடியும். எங்களுடைய எதிர்ப்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட கூடாது. ஆகவே, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு அமைய விட்டுக்கொடுப்புடன் சஜித் பிரேமதாச முன்மொழிய வேண்டும் என விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தீ விபத்து மற்றும் மண்சரிவில் காரணமாக லோகி மற்றும் சந்திரகாமம் தோட்டங்களில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் மற்றும் மெட்ரஸ் ஆகிய வழங்கும் நிகழ்வு இன்று (08) அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் நடைபெற்றது.
அதில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு இதன் போது வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு (எரிவாயு கொள்கலன், எரிவாயு அடுப்பு) சமையலறை உபகரணங்கள் மெட்ரஸ் போன்ற பொருட்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு தலா ஒரு குடும்பத்திற்கு 25,000 வீதம் 625,000 ரூபாவினை செலவு செய்துள்ளது.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் கல்வி ராஜங்க அமைச்சராக இருந்து போது பல பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கிறேன், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு மாத்திரம் 1200 இலட்சம் ரூபா 3 மாடி கட்டடத்தினையும் கட்டுவதற்கும் பாடசாலையின் கேட்போர் கூடம் அமைப்பதற்கும் கொடுத்திருக்கிறேன்.
அதனை நாங்கள் நாளை (09) திகதி திறந்து வைக்கவுள்ளோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவஞானம் பத்மநாதன், கிராமசேவகர் பெருமாள் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.