சிறுபான்மை மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுகின்றோம்-கோட்டாபய

236 0

தேசிய பாதுகாப்பு தொடர்பாக, தான் வெளியிடும் கருத்துக்கள், சிறுபான்மை மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுபான்மையினத்தவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் தாங்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்

அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது,  “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் துறைமுகங்கள், விமானநிலையங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், இன்று இந்த அரசாங்கம், எமது விமானநிலையங்களையும் துறைமுகங்களையும் சர்வதேசத்திற்கு தாரை வார்த்துக்கொடுத்துள்ளது.

அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தால், எமது நாட்டின் தேசிய சொத்துக்களை பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

நாம், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவோம் என்றுக்கூறியவுடன் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் இதனை சிலர் தவறாக சித்தரிக்க முற்படுகிறார்கள்.

இதன் ஊடாக சிறுபான்மையினரின் சுதந்திரத்தைப் பறிக்கவே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறிவருகிறார்கள். அப்பாவி மக்களுக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் செயற்பட்டதில்லை.

நாம் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அல்ல. மாறாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தவர்களாகவே காணப்படுகிறோம்.சிங்கள- தமிழ்- முஸ்லிம்கள் என அனைவருக்கும் எமது நாட்டில் நிலவிய பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருந்தது.

இதனை நாம் தான் அழித்தோம் என்பதை அனைத்து மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.