பலாலி விமான நிலைய புனரமைப்பிற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமானால் கூட்டமைப்பு தட்டிக்கேட்கும்

333 0

பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.  அதனால் பெரும் அபிவிருத்திக்கான வாய்ப்பு அங்கு உருவாகும். எனினும் இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவோ அல்லது மக்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அறிந்தால் கூட்டமைப்பு நிச்சயம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பொதுமக்களின் 349 ஏக்கர் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவீகரிக்கப்பட்டதாகவும், 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மாத்திரமே இழப்பீடு கிடைத்திருப்பதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளுக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களின் 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டள்ள போதிலும் இதுவரையில் அவை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் பலாலி விமான நிலையத்துக்கு கிழக்குப் பக்கமாக இருந்துவந்த விமானநிலைய நுழைவாயிலை தற்போது மேற்குப் பக்கமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு நடைபெற்றால் தமது சொந்தக் காணிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரையும் இழக்கவேண்டிவரும் என்று மக்கள் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.