யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணமெங்கும் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பத்தை கண்டித்தே வட மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்தாலை அனுஷ்டிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பிலான வர்த்தக நிலையங்களைத் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் பழக்கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.
அத்துடன் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரும் ஹர்த்தாலுக்குப் பூரண ஆதரவு வழங்கினர்.
இதேவேளை, பாடசாலைகள் மற்றும் வங்கிகள் என்பன இயங்கவில்லை.
ஹர்த்தாலை அடுத்து யாழ் நகர் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார்மடம் உட்பட ஏனைய சந்தைகளும், எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இயங்கவில்லை.
மேலும் பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்கள், மற்றும் ஏனைய நிறுவனங்களும் இயங்கவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கல்விச்செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.