தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தீர்வுத் திட்டயோசனைக்கான மக்களாணையை கோரும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி நிகழ்வு குறித்து தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழர் மரபுரிமை பேரவை ஆகியவற்றுக்கிடையே விரிவான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், எழுக தமிழ் எழுச்சிப் பேரணி முன்னெடுப்புகள் குறித்தும், ஒரு மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியத்துவம், செயற்பாடுகள், எழுக தமிழ் நிகழ்வின் பின்னரான காலத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் இந்த எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி நிகழ்விற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழர் மரபுரிமை பேரவை சார்பில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் ஏகமனதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுடன் தமிழர் மரபுரிமை பேரவையின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
05/09/2019