மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: காங். உள்பட 9 கட்சிகள் பங்கேற்பு

368 0

201610251159151487_cauvery-issue-stalin-led-all-party-meeting-congress_secvpfகாவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காங்கிரஸ் உள்பட 9 கட்சிகள் பங்கேற்றனர்.காவிரி நதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் போதெல்லாம், இரு மாநிலங்களும் அதை வெவ்வேறு விதமாக அணுகுகின்றன.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி பிரச்சினை குறித்து எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கிறார்கள். இந்த வி‌ஷயத்தில் அவர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கட்சிகள் அப்படி ஒருமித்த கருத்துடன் செயல்படுவதில்லை. காவிரி நீருக்காக தமிழக கட்சிகள் தனித்தனியாகவே போராடும் நிலை உள்ளது. இதனால் தமிழகத்தால் இந்த பிரச்சினையில் வலுவான அழுத்தம் கொடுக்க முடியாத சூழ்நிலையே உள்ளது.

இந்த குறையை நிவர்த்தி செய்ய, தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. காவிரி நீர் பிரச்சினை பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்க வாருங்கள் என்று தி.மு.க. பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த அழைப்பை அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள் புறக்கணித்தன.

த.மா.கா., காங்கிரஸ் உள்பட 15 கட்சிகள் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றன.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு காவிரி பிரச்சினை குறித்து பேச அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. உள்பட மொத்தம் 16 கட்சி களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர்மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் திருப்பூர் அல்தாப், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன், விவசாய தொழிலாளர் கட்சி சார்பில் பொன்.குமார், வல்லரசு பார்வர்டு பிளாக் சார்பில் பி.என்.அம்மாவாசி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெகலான் பாகவி, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பஷீர் அகமது, திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் பொதுச் செயலாளர் சுப.வீர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் வியாகத் அலிகான் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்ட முடிவில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.