ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது- மு.க.ஸ்டாலின்

446 0

மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்கு தயார் என்று டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு மந்திரி தலைமையிலான கூட்டத்தில், தமிழக உணவு அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்து விட்டு வந்திருப்பதும், இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

கூட்டுறவுத் துறையிலும், உணவுத் துறையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல் அடையாளம் பிரித்துப் பார்க்க முடியாமல், அதனுடன் சங்கமித்துவிட்ட அமைச்சர்கள் இருவரும் மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் முடிவிற்கு எல்லாம் கைகட்டி, வாய் பொத்தி ஆதரவுக் கரம் நீட்டி வருவது வேதனைக்குரியது.

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 5 வகை குடும்ப அட்டைகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க. அரசு, புதிதாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தில் சேர்ந்து தமிழ்நாட்டில் நீண்ட காலமாக உள்ள பொது வினியோகத் திட்டத்தையே இழுத்து மூடத் தயாராகி விட்டது.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம்

தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் கூடப் பெற வக்கில்லாத அ.தி.மு.க. அரசு, இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்களையும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில், மக்களுடைய இசைவைப் பெறாமல் இணைவதன் மூலம் தாரை வார்க்க முடிவு செய்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் சட்டமன்றத்தில் கொடுக்கும் வாக்குறுதி ஒன்று, ஆனால் அவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து வெளியில் செயல்படுவது வேறு ஒன்று என்பதையே இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மாநில உரிமையை விட்டுக்கொடுத்து மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பு 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாக கருத்துக்களைக் கேட்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.