பா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும், ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தனது மவுனத்தையே பரிசாக தந்தார்.
அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து காலியான தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு உருவானது. டெல்லி பா.ஜ.க. மேலிடமும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. ரஜினிகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தபோதும், பா.ஜ.க.வின் இந்த விருப்பத்தை ரஜினிகாந்த் ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். இது சம்பந்தமாக தன்னை சந்திக்க வருபவர்களிடம் பிடிகொடுக்காமல், நழுவி வருகிறார்.
தன்னை தொடர்பு கொண்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம், தான் இப்போது ‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும் தன்நிலையை அவர் தெளிவுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு (2020) தை மாததத்திற்கு பிறகு தனிக்கட்சியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ பொங்கல் தினத்தில் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க இருந்தாலும், தர்பார் பட வெளியீட்டுக்கு பிறகு முழு நேர அரசியலில் ரஜினிகாந்த் இறங்க உள்ளார்.
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். இந்த தேர்தலை நட்பு ரீதியாக பா.ஜ.க.வுடன் இணைந்தே அவர் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்ற வாக்குறுதியை ரஜினிகாந்திடம் இருந்து பெறுவதற்கே அவரது ரசிகர்கள் 23 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, அவர் தொடங்க இருக்கும் தனிக்கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்பது தெரிய இன்னும் சில மாதங்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.