ஈழ விடுதலையின் காவலர்கள் தாயகத்தை காத்து நின்ற காலத்தில் “பொங்கு தமிழ்” பொங்கி வழிந்தது ” நாமெல்லாம் ஈழத்தாய் வயிற்று மைந்தர்கள் …” என உலகின் முன் எழுந்து நின்றோம்.
பொங்கு தமிழ் எழுச்சி கண்டு தாயகத்தை புலம்பெயர் தேசங்கள் பூரிப்புடன் கை நீட்டி வரவேற்றன. . காலங்கள் உருண்டு ஓட காயவர் கூட்டம் எம் காவலர்களை காணாமல் போகச் செய்தது.
ஈழ விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்காலில் முற்றுப்பெற வைத்தது பௌத்த பேரினவாத அரசாங்கம். தமிழினத்தை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த எழுக தமிழாய் வட, கிழக்கு இணைந்த தாயக நில பரப்பு எங்கும் அலை அலையாய் மக்கள் தன் எழுச்சியாய் திரண்டு தமது ஏககோபித்த குரலால் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்தனர்.
முதலாவது எழுக தமிழின் உந்து சக்கதியாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிமிர்ந்து நின்றது. தமிழ் மக்கள் பேரவை என்ற குடையின் கீழ் கட்சி பாகுபாடு இன்றி எழுக தமிழ் வியாபித்து விண்தொட்டது.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த தேசத்திற்கு தந்த சட்டவல்லுனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுக தமிழின் பிதாமகன். ஆனால் இனி இம் மாதம் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 பற்றி அவர் மௌனம் காப்பது தான் ஏனோ?
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக தோற்றம் கொண்ட போதும் கட்சி அரசியல் கலந்து விட்டது என்பது சாபக்கேடானது.
சிங்கள தேசம் கட்சி அரசியலை விட பௌத்த பேரினவாதத்திற்கே எப்போதும் முக்கியம் கொடுத்து வருகின்றது. ஆனால் தமிழ் தேசமோ ” நான் பெரிது, நீ சிறிது” என போட்டி அரசியலை செய்கின்றது.
வல்லாதிக்க சக்திகளின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்குண்ட தமிழ் அரசியல் தலைவர்கள் ஏகபோகம் பேசாது. தமிழின விடுதலை ஒன்றே எமது கொள்கை எனக்கொண்டு தமிழ் அரசியல் வாதிகள் அனைவரும் கைகோர்த்து எழுக தமிழாய் எழுத்து நில்லுங்கள். இதுவே எம் மக்களின் வேண்டுகையும் அபிலாசையும் ஆகும்.