எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்படாது – தேர்தல்கள் ஆணைக்குழு

347 0

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் கால எல்லை இம் மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

இந்த திகதியில் எவ்வித்திலும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இத்தேர்தலின் போது குறித்த உள்ளூர் அதிகார சபையின் எல்லைக்குள் தேருனர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுமான அனைத்து அரச அலுவலர்கள் , ஊழியர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் அப்பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலர்கள், ஊழியர்கள், தபால் திணைக்களத்தின் அலுவலர்கள், ஊழியர்கள், புகையிரத சேவையை நடத்திச் செல்வதற்கு தேவையான இன்றியமையாத புகையிரத திணைக்கள அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நாடெங்கிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முப்படைகளினதும் பொலிஸ் திணைக்களத்தினதும் நேரடி பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினரின் அங்கத்தவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் தகமைகளைப் பெறுவதோடு, அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கின்ற காலக் கெடு முடிவடையும் வரை காத்திராமல் உடனடியாக தமது விண்ணப்ப படிவங்களை சமர்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகைமையுள்ள அனைவரிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்தலின் போது அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கையில் அதற்கான தகவல்கள் 2018 ஆம் ஆண்டின் உள்ளுர் அதிகார சபைக்குரிய தேருனர் இடாப்பில் இருந்து சரியாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் அஞ்சல் வாக்கு விண்ணப்ப படிவங்களை தனிப்பட்ட முறையில் பரிசீலித்துப் பார்த்து விண்ணப்பதாரியின் ஆள் அடையாளம் தொடர்பாக உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அத்தாட்சி படுத்த வேண்டும் எனவும் அத்தாட்சிபடுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் முடிந்தளவு விரைவில் குறித்த விண்ணப்பதாரி வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2019 செப்டெம்பர் 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய தேர்தல் அலுவலகத்திற்கு கிடைக்கத்தக்கவாறு அனுப்பப்பட வேண்டும் எனவும் , அத்திகதி மீணடும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் , உரிய திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும் முறையாக நிரப்பப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய காலப்பகுதியின் இறுதி தினத்தன்று அல்லது அதற்கு முந்திய தினத்தன்று விண்ணப்ப படிவங்களை அஞ்சலில் சேர்ப்பதற்கு பதிலாக அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு வந்து கையளித்தல் மிக பொறுத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான உரிமையுள்ள அனைத்து அஞ்சல் வாக்காளர்களினதும் வசதி கருதி உள்ளுர் அதிகார சபையின் தேருனர் இடாப்புக்கள், காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், எல்பிட்டி பிரதேச செயலகம் , எல்பிட்டி பிரதேச சபை அலுவலகம் மற்றும் எல்பிட்டி பிரதேச சபைக்குரிய அனைத்து கிராம அலுவலகங்கள் ( அந்தந்த பிரிவுக்குரிய இடாப்புகளின் பகுதிகள் ) ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளமான www.election.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ‘ தேருனர் இடாப்பு 2018 ‘ என்ற தலைப்புக்குள் பிரவேசித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தத்தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் துணையோடு அஞ்சல் வாக்கு விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பாதுகாப்பு படை முகாம்களில் பணியாற்றுகின்ற அங்கத்தினர்களின் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை நிரப்புவதற்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான விஷேட நடைமுறையொன்று தலைமை அதிகாரிகளோடு கலந்துரையாடி ஒழுங்கு செய்யப்படும்.

இதற்கு மேலதிகமாக தேருனர்கள் கூட்டம் ஒன்றின் தகவல்கள் தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்தில் காட்டப்பட்டுள்ள அஞ்சல் வாகுக்குகளுக்கான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தை நிரப்பி தேர்தல் ஆணைக்குழுவின் 011-2868426 என்ற தொலைநகல் இலக்கத்து அனுப்பி வைப்பதன் ஊடாக அஞ்சல் வாக்களர்களுக்கு உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.