பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது நள்ளிரவு வேளையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரில் மிகவும் பழமையான போலீஸ் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் போலீஸ் பணிக்காக பயிற்சி பெற்றுவரும் சுமார் 700 பேர் தங்கியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு இந்த கல்லூரிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் அறைகளில் தங்கியிருந்த பயிற்சி மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அங்கு காவலுக்கு நின்ற படையினர் தீவிரவாதிகள்மீது எதிர்தாக்குதல் நடத்தினர்.
மேலும், கூடுதலாக போலீஸ் மற்றும் ராணுவப் படைகளும் அங்கு வந்து சேர்ந்தன. இந்தப் படைகள் கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த பலரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தன.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இருதரப்பு துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர் தீவிரவாதிகளில் இருவர் தங்களது உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து பலியாகினர். ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத அமைப்பின் அல்-அலிமி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த 120 பேர் குவெட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.