தமிழகத்தில் ரூ. 2780 கோடி முதலீடு- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்

274 0

தமிழகத்தில் ரூ. 2780 கோடி முதலீடு செய்வதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 28-ந்தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் 4 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

உலகப் புகழ் பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவது உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 1-ந்தேதி லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு பபல்லோ நகருக்கு சென்று மிகப்பெரிய மாட்டுப் பண்ணையை பார்வையிட்டார்.

சேலத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் அமைய இருக்கும் கால்நடை பூங்காவுக்காக மாடு வளர்ப்புக்கான தொழில்நுட்பங்களை அங்கு கேட்டறிந்தார். அதன் பிறகு நியூயார்க் நகருக்கு சென்றார்.

நியூயார்க்கில் நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அமெரிக்க தொழில் அதிபர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

 

 அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த காட்சி

 

தமிழகத்தில் சாலை வசதி, குடிநீர், மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் ஒருங்கே அமைந்துள்ளதால் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசு செய்து தரும்.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலம் தமிழகம். தடையற்ற மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்கள் கால்நடை மற்றும் பால் வளம், ஆட்டோ மொபைல், எரிசக்தி போன்றவைகளுக்கு அரசு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.

எனவே தமிழகத்துக்கு வந்து தொழில் தொடங்குங்கள். உங்களுக்கு அரசு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களான கேட்டர்பில்லர், போர்டு போன்ற நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் தமிழ் நாட்டில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நல் அனுபவங்களைப் முதல்-அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் பிராங்க் விஸ்னரும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து “தொழில் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு” என்ற ஒரு காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதி சார்ந்த தொழில்நுட்ப முதலீடுகளுக்கும், வாகன உற்பத்தித் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலையைப் பயன்படுத்த வாய்ப்புள்ள வானூர்தி, விண்கல தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என அதில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது முதல்- அமைச்சர் தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், முதலீடுகளுக்கு அரசு அளித்து வரும் ஊக்க உதவிகள், தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க மனித வளம் தமிழ்நாட்டில் உள்ளது என்பதை எடுத்துக்கூறி, அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஜீன் மார்டின், ஆக்கியுள் சிஸ்டர், டைசஸ் பார்மா, நுராய் கெமிக்கல்ஸ், நோவிடிம் லேப், ஜோகோ ஹெல்த், எஸ்.டி.எல்.என்.ஜி., சராம்-4, எமர்சன், அஸ்பயர் கன்சல்டிங், ரெவச்சூர்-எல்.எல்.சி., ஹில்லைன் டெக்னாலஜி உள்ளிட்ட 16 நிறுவனங்கள் ரூபாய் 2,780 கோடி முதலீடு செய்து, தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதைத் தவிர, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், நாப்தாகிரார்கர் யூனிட்டுடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை முதற்கட்டமாக சுமார் 50,000 கோடி ரூபாய் அளவில் அமைக்க விருப்பம் தெரிவித்து, கொள்கை அளவிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க, மெலிஸ்சா, ஸ்லர், மார்க் ஜான்சன், கே அண்டு நில்கோன், வாரன் காப், மானிஸ் பண்டாரி போன்ற தொழில் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் நேரடியாக ஆலோசித்தார்.

இந்த கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார்.

தமிழ் நாட்டிற்கு வரும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து வகையான ஆக்கமும், ஊக்கமும் அரசு அளிக்கும் என உறுதி அளித்தார்.

தொழில் வளத்தைத் தவிர, விவசாயம் சார்ந்த தொழில்களை, குறிப்பாக, வேளாண் பெருமக்களுடைய வருமானத்தை, கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்திய இந்த கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க புரிந் துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :