ஆவின் பாலகங்களில் சூடான பால் விலை 3 ரூபாய் உயர்வு

286 0

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஆவின் பாலகங்களில் விற்கப்படும் சூடான பால் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் பாலகங்கள் பல இடங்களில் இயங்கி வருகிறது.

ஆவின் நிறுவனத்தின் உரிமம் பெற்று தனியார்களும், கூட்டுறவு சங்கங்களும் நடத்தி வருகிறார்கள்.

இந்த பாலகங்களில் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம், குலோப்ஜாமுன், மைசூர்பாக், லெசி, பால்கோவா உள்ளிட்ட அனைத்து ஆவின் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் 120 மில்லி லிட்டர் அளவுள்ள சூடுபடுத்தப்பட்ட பால் ரூ.7-க்கும், பாதாம் பவுடர் கலந்த பால் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஆவின் பாலகங்களில் விற்கப்படும் சூடான பால் விலையும் உயர்ந்துள்ளது.

சாதாரண பால் ஒரு கப் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும், பாதாம் பவுடர் கலந்த பால் ரூ.12-க்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆவின் பாலகங்களின் உரிமையாளர்கள் கூறியதாவது:-

ஆவின் பாலகங்களில் சூடான பால் அருந்த அதிகமான மக்கள் வருகின்றனர். இதற்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் இருந்து கப் தருவார்கள். பிளாஸ்டிக் தடை வந்ததில் இருந்து அந்த ‘கப்’பை நிறுத்தி விட்டார்கள்.

இதனால் நாங்கள்தான் விலை கொடுத்து ‘கப்’ வாங்கி மக்களுக்கு சூடான பால் கொடுக்கிறோம். இதனால் எங்களுக்கு சில சமயம் நஷ்டம்தான் ஏற்படுகிறது.
பால்

பால் விலை உயர்ந்ததால் அதன் தயாரிப்பு பொருட்களான நெய், வெண்ணை, தயிர், பால்கோவா விலையும் உயர உள்ளது.

வெளிநாடு சென்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 8-ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் வந்ததும் ஆவின் பொருட்கள் விலை ஏற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.